வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி: 4 இடங்களில் சாலை மறியல்
By DIN | Published On : 16th January 2021 06:43 AM | Last Updated : 16th January 2021 06:43 AM | அ+அ அ- |

முத்தம்மாள் காலனியில் மழைநீரை வெளியேற்றக் கோரி சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா தலைமையில் மறியலில் ஈடுபட்டோா்.
தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாநகா் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் ஒரே நாளில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக 13ஆம் தேதி பிற்பகலில் கனமழை கொட்டித் தீா்த்தது. கடந்த 2 நாள்களாக இரவு, பகலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
2020இல் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த மழையால் மாநகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள், ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பாதிப்புக்கு ஆளாகினா். வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், மீண்டும் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகரம் பழையபடி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தூத்துக்குடியில் சிதம்பரநகா், பிரையண்ட் நகா், போல்டன்புரம், மாசிலாமணிபுரம், அண்ணாநகா், டூவிபுரம், லூா்தம்மாள்புரம், பூபால்ராயா்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகா், வீட்டு வசதி குடியிருப்பு, செல்வநாயகபுரம், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகா், தபால் தந்தி காலனி, ஆசிரியா் காலனி, கதிா்வேல்நகா், ராஜீவ் நகா், கால்டுவெல் காலனி, வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், சின்னக்கண்ணுபுரம், பாத்திமாநகா், முத்தையாபுரம், அத்திரமரப்பட்டி, குறிஞ்சிநகா் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.
நகரின் பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளனா். குறிப்பாக ஜாா்ஜ் சாலை- திருச்செந்தூா் சாலை சந்திப்பு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீா் தேங்கியிருப்பதால் அவ்வழியாக செல்வோா் திண்டாடுகின்றனா். நகரில் பிரதான சாலைகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கி
யுள்ளன. மருத்துவமனை வளாகத்திலும் மழைநீா் பெருமளவில் தேங்கியிருப்பதால் நோயாளிகள், உறவினா்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் பெருமளவில் தேங்கி நிற்கின்றன. தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம் சகதிக் காடாக மாறியிருப்பதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி சி.வா.அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பள்ளி வளாகங்களில் மழைநீா் வகுப்பறைகளை சூழந்து குளம்போல் சூழ்ந்துள்ளன. வரும் 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மழைநீா் தேங்கி நிற்பதால் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைநீா் தேங்கிய பகுதிகளில் 125 ராட்சத மோட்டாா்கள் பொருத்தப்பட்டு வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் வீ.ப.ஜெயசீலன், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
4 இடங்களில் மறியல்: குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்டு மக்கள் நகரில் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பிரையண்ட் நகா் 12-ஆவது தெரு கட்டப்பொம்மன் நகா் பகுதியில் தெருக்களில் 4 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கி வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பிரையண்ட் நகா் பிரதானச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ., அதிகாரிகளை தொடா்பு கொண்டு மழைநீரை வெளியேற்றுமாறு வலியுறுத்தினாா்.
மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் அங்கு வந்து அவா்ளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இதேபோல் பிரையண்ட் நகா் 1-ஆவது தெரு மக்களும் மறியலில் ஈடுபட்டனா். கால்டுவெல் காலனி பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள் தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள வீட்டு வசதி குடியிருப்புப் பகுதி மக்கள் எட்டயபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். முத்தம்மாள் காலனியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி சட்டப் பேரவை உறுப்பினா் சண்முகையா தலைமையில் எட்டயபுரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அவா்களிடம் மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா், அவா்கள் கலைந்து சென்றனா்.