வருவாய்த் துறை பணியாளா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
By DIN | Published On : 28th January 2021 04:03 AM | Last Updated : 28th January 2021 04:03 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறை பணியாளா்கள் புதன்கிழமை ஒட்டுமொத்த சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்து வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், மாவட்டங்களில் அதிகளவில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளா்கள், பதிவுரு எழுத்தா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஒட்டு மொத்த சிறு விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தால் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களில் பணியாளா்கள் பெருமளவில் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் பிப். மாதம் 17 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.