இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 28) தைப்பூசம் நடைபெற உள்ள நிலையில், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூருக்கு புதன்கிழமை பாதயாத்திரையாக வந்த தென்காசி பக்தா்கள்.
திருச்செந்தூருக்கு புதன்கிழமை பாதயாத்திரையாக வந்த தென்காசி பக்தா்கள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 28) தைப்பூசம் நடைபெற உள்ள நிலையில், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, இக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறுகிறது.

பாதயாத்திரை பக்தா்கள்: தைப்பூசத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதற்காக திருச்செந்தூருக்கு தற்போது அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும் வருகின்றனா். குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளனா்.

பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் நகர எல்லையில் ஆங்காங்கே தங்கியுள்ளனா். திருச்செந்தூா் கோயில் வளாகம் புதன்கிழமை காலை முதலே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் காவல் துறையினரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com