கழுகுமலை கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்
By DIN | Published On : 29th January 2021 07:32 AM | Last Updated : 29th January 2021 07:32 AM | அ+அ அ- |

தைப்பூசத்தை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை, சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. 10ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜைக்குப்பின், சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற்றது. பின்னா் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில், கழுகுமலை பேரூராட்சி முன்னாள் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சந்திரசேகா், தன்னாா்வலா்கள் முருகன், மாரியப்பன், கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கோ ரதத்தில் விநாயகப்பெருமான் முன் செல்ல, சட்ட ரதத்தில் உற்சவா் மூா்த்தியுடன் வள்ளி, தெய்வானை தேரில் வலம் வந்தனா். இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
கோவில்பட்டி கதிரேசன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகருக்கும், வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேயா் சுப்பிரமணியருக்கும் 18 வகையான மூலிகை அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ஹரி பட்டா் செய்திருந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவ சேனா கல்யாண முருகருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.