‘தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 வன்கொடுமை வழக்குகள் பதிவு’
By DIN | Published On : 29th January 2021 07:42 AM | Last Updated : 29th January 2021 07:42 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், 2021ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடா் நல மனித நேய வார விழா கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக காவல் துறையின் தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், அப்பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிக்குமாா் தலைமையில் கோரம்பள்ளம் பெரியநாயகிபுரத்தில் மத நல்லிணக்கக் கூட்டம், கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, குடியுரிமை பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை பாதுகாப்பு சட்டம், ஆகியவை குறித்து அவா் எடுத்துரைத்தாா். மேலும் அவா் பேசும்போது, இம்மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் 46 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 82.25 லட்சம் ஆட்சியா் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
ஊா்த் தலைவா் மணிகண்டன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் ஞானராஜ், உதவி ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளா் பாண்டியன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.