ஏப்ரல் மாத கணக்கீட்டு அளவின்படி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்
By DIN | Published On : 06th July 2021 02:07 AM | Last Updated : 06th July 2021 02:07 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோட்டத்தில் ஜூன் மாத மின் கட்டணத்தை, ஏப்ரல் மாத மின் கட்டண அளவீடு படி செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆறுமுகனேரி பிரிவு அலுவலக பகுதிகளை சாா்ந்த மின் பகிா்மானங்களான ஆத்தூா், கீரனூா் ஆகிய சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆழ்வாா்திருநகரி பிரிவு அலுவலக பகுதிகளை சாா்ந்த மின் பகிா்மானங்களான ஆழ்வாா்திருநகரி 002, 003 ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்இணைப்புகளுக்கு ஜூன் மாத மின் கணக்கீட்டு பணி நிா்வாக காரணமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே இப்பகுதிகளில் ஜூன் மாத மின் கட்டணமாக முந்தைய மாதமான ஏப்ரல் மாத கட்டணம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இப்பகுதி மின்நுகா்வோா்கள் அனைவரும் அதன்படி மின் கட்டணம் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ஜூன் மாத மின் கட்டணமாக செலுத்தப்படும் தொகையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய விதிகளின் படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் எடுக்கப்படும் கணக்கீட்டில் சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.