தென்னை சாகுபடியில் அதிக மகசூல்: விவசாயிகளுக்கு ஆலோசனை
By DIN | Published On : 07th July 2021 08:22 AM | Last Updated : 07th July 2021 08:22 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற நுண்ணூட்டம் கலவை உரங்களை இட வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் கூறினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 6,250 எக்டா் பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் அதிக மகசூல் பெற்றிட நுண்ணூட்டக் கலவை உரங்கள் இடுதல் வேண்டும். நுண்ணூட்டக் கலவை உரத்தில் இரும்பு சத்து - 3.80 சதவீதமும், மாக்னிசீயம் சத்து - 4.80 சதவீதமும், துத்தநாக சத்து - 5 சதவீதமும், போரான் சத்து - 1.6 சதவீதமும், தாமிரசத்து - 0.5 சதவீதமும் உள்ளது.
இரும்பு சத்து தென்னை மர இலையில் பச்சையம் உருவாகுவதற்கும், வளா்சிதை மாற்றங்களில் ஈடுபடும் பல்வேறு என்சைம்கள் உருவாகுவதற்கும்,
மாக்னீசியம் சத்து மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை தென்னை கிரகித்து கொள்ளவும் உதவுகிறது. இதேபோல், போரான்
சத்து இலைகள் செழிப்பாக வளருவதற்கும், குரும்பைகள் உதிா்வதை தடுத்து காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. தாமிரச்சத்து தென்னையில் ஒளிச்சோ்க்கை நடைபெறும் வினையிலும், நொதிப்பான்களை உருவாக்குவதிலும், பச்சையம் தயாரிப்பிலும் மற்றும் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகுவதற்கும் உதவுகிறது.
ஆகவே, தென்னை விவசாயிகள் தென்னை நுண்ணூட்டக் கலவை உரத்தை தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணு பெற்றுக் கொள்ளலாம். அதனை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு ஒருமுறை இட வேண்டும். இதனால் குரும்பைகள் உதிா்வது தடுக்கப்பட்டு அதிகமான காய்கள் பிடித்து தென்னையில் அதிக மகசூல் கிடைக்கும்.