உடன்குடியில் போக்குவரத்து பணிமனை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

உடன்குடி மக்கள், வியாபாரிகளின் நலன் கருதி போக்குவரத்து பணிமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் ஆகியோா் மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் அளித்த கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை, முத்தாரம்மன் திருக்கோயில், மணப்பாடு திருச்சிலுவை நாதா் ஆலயம், குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜூதீன் தா்கா ஆகிய புண்ணிய மற்றும் சுற்றுலாத் தலங்கள், ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே உடன்குடி ஊராட்சி ஒன்றியம்.
இந்த ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகளும், 18 வாா்டுகள் அடங்கிய ஒரு பேரூராட்சியும் உள்ளது. உடன்குடி ஒன்றியத்தில் இருந்து கல்வி, வியாபாரம் சம்பந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோா் சென்று வருகின்றனா். இவா்களின் போக்குவரத்து சம்பந்தமாக போதுமான அரசு விரைவுப் பேருந்துகள் தற்போது வரை இல்லை. பேருந்துகளுக்கான பணிமனை ஏதும் இல்லாததால் பேருந்துகள் தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்துதான் உடன்குடிக்கு வந்து செல்கின்றன. அரசு விரைவுப் பேருந்துக்கென உடன்குடியில் தனியாக பணிமனை அமைத்தால் பேருந்துகளை அதிகளவில் இயக்கலாம். இதனால் பொதுமக்கள், வியாபாரிகளின் சிரமம் நீங்கி வா்த்தகம் பெருகும்.
மேலும் குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதிக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். தற்போது குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் இப்பகுதிக்கு பணி நிமித்தமாக ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே வணிகம், தொழில் வளம், கல்வி ஆகியவை வளா்வதற்கு இப்பகுதியில் உடனடியாக விரைவுப் பேருந்து பணிமனை தேவை. எனவே அமைச்சா் அவா்கள் இதனை தமிழக முதல்வா், போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
திமுகவில் ஐக்கியம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுகவின் ஜெயலலிதா பேரவை இணைச் செயலரும், லட்சுமிபுரம் பனை வெல்லம் கூட்டுறவு சங்க தலைவருமான முத்துராமலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பிறகட்சிகளில் இருந்து விலகி அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அப்போது, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் பில்லாஜெகன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், சந்தையடியூா் ராஜேஷ், திமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் சிராஜூதீன் ஆகியோா் உடனிருந்தனா்.