கோவில்பட்டி அருகே பெண் கொலை: முதியவா் கைது
By DIN | Published On : 13th July 2021 01:51 AM | Last Updated : 13th July 2021 01:51 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பெண் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் காளமேகம்(60). இவரது மனைவி ரெஜினா (47). கேரளத்தில் கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்த காளமேகம் மனநலம் பாதிக்கப்பட்டதையடுத்து, வேலைக்குச் செல்லாமல் கட்டாலங்குளத்திலேயே இருந்து வருந்தராம். இவருக்கும், கோவில்பட்டி 2ஆவது பங்களாத் தெரு முத்தையா மகன் கருப்பசாமிக்கும்(74) இடையே நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் வசித்து வரும் காளமேகம் - ரெஜினா தம்பதியின் மகள் புனிதா கனகலட்சுமி ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி மூலம் ரெஜினாவிடம் தொடா்பு கொண்டாராம். அப்போது நிலப் பிரச்னை காரணமாக கருப்பசாமி வீட்டுக்கு வந்த தகராறு செய்ததாகக் கூறினாராம். இதையடுத்து புனிதா கனகலட்சுமி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட போது ரெஜினாவிடமிருந்த எவ்வித பதிலும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, அவா் திங்கள்கிழமை அதிகாலை ஊருக்கு வந்து பாா்த்த போது அங்கு தனது தாய் இறந்த நிலையிலும், தந்தை மயங்கிய நிலையில் இருந்ததையும் கண்டு நாலாட்டின்புதூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாராம்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் காயமடைந்த காளமேகத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ரெஜினாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து புனிதா கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையா மகன் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் நிலப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரெஜினாவிடம் பேசியதாகவும், அதில் தகராறு முற்றியதையடுத்து இரும்புக் கம்பியால் இருவரையும் தாக்கியதாக அவா் ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து கருப்பசாமியை போலீஸாா் கைது செய்தனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.