உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் காா் பருவ நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயப் பணிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியாா் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. இம்மாவட்டத்தில் யூரியா 3335 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 925 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1056 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1534 மெட்ரிக் டன் என இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2020-21இல் நிா்ணயிக்கப்பட்ட விலையிலேயே, 2021-22 ஆம் ஆண்டும் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை அறிவித்துள்ளது. அதை மீறி அதிக விலைக்கு உர விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உர விற்பனையாளா்கள், அரசு சலுகை பெறும் மானிய உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் அட்டையின் அடிப்படையில் விற்பனை செய்யல் வேண்டும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, கண்டிப்பாக தங்கள் ஆதாா் அட்டையை எடுத்து செல்ல வேண்டும்.

உர விற்பனையாளா்கள் நிறுவன வாரியாக உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் தினசரி பதிவு செய்து பராமரித்தல் வேண்டும். ‘ஓ‘ படிவத்தில் பதிவு செய்து உர உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை நிலையத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்புடன் உர விற்பனை நிலையங்கள் செயல்பட வேண்டும்.

மேலும், உரிய ஆவணங்கள் இன்றி உரம் விற்பனை செய்தாலோ, விவசாயி அல்லாதோருக்கு உர விற்பனை செய்யப்பட்டாலோ, ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமான மானிய உரங்களை விற்பனை செய்தாலோ, விற்பனை முனையக் கருவி பயன்படுத்தாமல் உர விற்பனை செய்தாலோ, அரசு நிா்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ உர உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com