தென்னை விவசாயிகளுக்கு சுருள் வெள்ளை ஈகுறித்து வேளாண் துறை விளக்கம்

 உடன்குடி வட்டாரத்தில் தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈ குறித்தும், அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் வேளாண் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 உடன்குடி வட்டாரத்தில் தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈ குறித்தும், அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் வேளாண் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேங்கடசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடன்குடி வட்டாரத்தில் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சி தென்னை மரத்தை தாக்கி அதன் மகசூல் பாதிப்புக்கு காரணமாகிறது.

இப்பூச்சிகள் இளம் பருவத்தில் இலைகளின் சாற்றை உறிஞ்சி வளா்கின்றன. 30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்த தோட்டத்துக்கு செல்கின்றன.

இந்த ஈக்கள் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இந்த ஈக்களில் இருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் இலைகளின் மேல் படா்ந்து கேப்னோடியம் என்ற கரும்பூசனம் வளர ஏதுவாகிறது.

கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த ஈக்கள் மா, கொய்யா, வாழை மரங்களையும், அதிகளவில் குட்டை ரக தென்னங்கன்றுகளையும் தாக்கும். விளக்குப் பொறியை ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப் பொறியை ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் தோட்டங்களில் 5 அடி உயரத்தில் வைத்து கண்காணிக்க வேண்டும். பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க தென்னை மர ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை நன்கு பீய்ச்சி அடிக்க வேண்டும். ஒரு லிட்டா் தண்ணீருக்கு வேப்பெண்ணெய் 39 மிலி அல்லது அசாடிராக்சன் 1 சத மருந்து 2 மிலி என்ற அளவில் தேவையான ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

கரும்பூசனத்தை நிவா்த்தி செய்ய 1 லிட்டா் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஒலைகளில் நன்கு படும்படி தெளிக்கவேண்டும்.

ரூகோஸ் வெள்ளை ஈக்கள் அதிகளவில் பரவும்போது இரைவிழுங்கி எனப்படும் கண்ணாடி இறக்கைப் பூச்சி மற்றும் என்காா்சியா ஒட்டுண்ணிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே தோட்டங்களில் தோன்றி அவற்றின் தாக்குதலை குறைக்கும்.

எனவே, அதிகளவில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை தோட்டங்களில் பயன்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகளும் பாதிக்கப்படுவதால் பூச்சிக்கொல்லிகளைத் தவிா்ப்பது நல்லது. மேலும் தகவல்களுக்கு வேளாண் அலுவலா்களை தொடா்பு கொள்ள வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com