ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி போராட்டம்
By DIN | Published On : 29th July 2021 08:45 AM | Last Updated : 29th July 2021 08:45 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் புதன்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவிடும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டொ்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் மூன்றாவது அலை மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்ப்பதற்காக ஆலையில் தொடா்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை 6 மாதத்துக்கு நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி, ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், சாமிநத்தம், ராஜாவின் கோவில், மடத்தூா், தெற்கு சங்கரபேரி, வடக்கு சங்கரபேரி, அய்யனடைப்பு, தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, காவல்துறையினா் அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனா். இதனிடையே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த முயன்ற சிலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.