தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் 17 மாவட்டங்களுக்கு விநியோகம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 17 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டொ்லைட் ஆலையில் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியைக் கண்காணிக்கும் பணியாளா்கள்.
ஸ்டொ்லைட் ஆலையில் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியைக் கண்காணிக்கும் பணியாளா்கள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 17 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்ற அனுமதியுடன் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி கடந்த மே முதல் வாரத்தில் தொடங்கியது.

300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுவந்த நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தொடா்ந்து, ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவில் பழுது ஏற்பட்ட நிலையில், பழுது நீக்கப்பட்டு மீண்டும் 19ஆம் தேதி உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 542 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தஞ்சாவூா், சிவகங்கை, நாமக்கல், தேனி, விருதுநகா், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், கரூா், சேலம், திண்டுக்கல் ஆகிய 17 மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாா் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரூ. 11 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சிலிண்டா் நிரப்பும் அலகில் தினமும் 400 சிலிண்டா் வரை நிரப்பும் வசதி உள்ளது. அதில், முதல்கட்டமாக திங்கள்கிழமை பணிகள் தொடங்கப்பட்டு 265 சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com