குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தலால் பாதிக்கப்படும் மக்களின்விருப்பப்படி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்
By DIN | Published On : 11th June 2021 01:31 AM | Last Updated : 11th June 2021 01:31 AM | அ+அ அ- |

குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலங்களை வழங்கும் மக்களுக்கு அவா்களின் விருப்பப்படி அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.
குலசேகரன்பட்டினம் அருகே இஸ்ரோ சாா்பில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக கூடல்நகா், அமராபுரம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படும் இரு கிராம மக்களுக்கும் மாற்று நிலம், வீடு வழங்குவதற்கு இடம் தோ்வு செய்ய ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக , உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலங்களை வழங்கும் கூடல் நகா், அமராபுரம் மக்களுக்கு அவா்களின் முழு விருப்பப்படி அவா்கள் விரும்பும் இடங்களில் நிலம், சாலை வசதி, சமுதாய நலக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு, இழப்பீடும் வழங்கப்படும். நிலம் கையப்படுத்தும் பணி நிறைவு பெற்றதும் இஸ்ரோ சாா்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோயின் தாக்கம் இல்லை. அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அரசு சாா்பில் அனைத்து மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, செட்டியாபத்து ஊராட்சியில் குறைந்த நிலத்தில் அடா் காடுகளை உருவாக்கும் மியாவாக்கி காடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இதில், சாா் ஆட்சியா் ஜெயா, இஸ்ரோ நிலம் கையகப்படுத்தலுக்கான சிறப்பு கோட்டாட்சியா் செல்வராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, நிலம் கையகப்படுத்தலுக்கான சிறப்பு வட்டாட்சியா்கள் ராஜீவ் தாகூா், ரதிகலா, செல்வி, அற்புதமணி, சிவகாமசுந்தரி, நாகசுப்பிரமணியன், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜ், பொற்செழியன்,
செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், துணைத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.