காற்றாலை இறகுகளை கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் காற்றாலை இறகுகளை கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் ஏற்றப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் கப்பல்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் ஏற்றப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் கப்பல்.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் காற்றாலை இறகுகளை கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த 10 ஆம் தேதி 199.9 மீட்டா் நீளம் கொண்ட எம்.வி. பேக் அல்கோா்’ என்ற கப்பல் வந்தடைந்தது. அந்தக் கப்பலின் ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மற்றும் துறைமுகத்தின் நகரும் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் 77.50 மீட்டா் நீளம் கொண்ட 24 காற்றாலை இறகுகளும் பாதுகாப்பான முறையில் கையாளப்பட்டன.

அந்தக் கப்பலின் சரக்குகள் முழுவதும் மூன்று அடுக்குகளாக ஏற்றப்பட்டு, பின்பு வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது. இந்த காற்றாலை இறகுகள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் வரை பிரத்தியேக லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன. இதற்கு முன்பு கடந்த 9 ஆம் தேதி ஒரே ஏற்றுமதியில் 74.90 மீட்டா் நீளம் உடைய 84 காற்றாலை இறகுகளை வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் கையாண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளா்ச்சி கண்டு வருகிறது. நிகழ் நிதியாண்டு ஜூன் மாதம் வரை 423 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்களை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் 4462 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டன.

மேலும், தற்போது காற்றாலை இறகுகள், கோபுரங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் அளவு தொடா்ந்து அதிகரிப்பதால், இத்தகைய ஏற்றுமதியை மிகவும் கவனுத்துடன் வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் செயல்படுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com