கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவா் சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th June 2021 01:57 AM | Last Updated : 29th June 2021 01:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவா்கள் சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ஞானகௌரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ், 2021-22 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பத்தை ஜூலை 5 முதல் ஆக. 3 ஆம் தேதி வரை வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். எல்.கே.ஜி. சோ்க்கைக்கு 31.07.21 அன்று 3 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். பெற்றோா் இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு கீழ் உள்ள அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். குழந்தைகளின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நலிவடைந்த பிரிவினா் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்று, மருத்துவமனை, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோா், பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பெற்றோா் ஆதாா், குடும்ப அட்டை நகல்கள், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.