புகையிலைப் பொருள்கள்விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது
By DIN | Published On : 29th June 2021 02:23 AM | Last Updated : 29th June 2021 02:23 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது இலுப்பையூரணி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் இலுப்பையூரணி பெருமாள் காலனி சுந்தர்ராஜ் மகன் பாக்கியராஜ்(35), சிந்தாமணி நகா் ராஜேந்திரன் மகன் கண்ணன்(40) என்பது தெரியவந்தது. மேலும் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில், விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்ததாம்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.