நெடுங்குளம் பகுதியில் சேதமான சாலையை சீரமைக்க எம்எல்ஏ ஆட்சியருக்கு பரிந்துரை
By DIN | Published On : 29th June 2021 01:59 AM | Last Updated : 29th June 2021 01:59 AM | அ+அ அ- |

சாத்தான்குளம்: நெடுங்குளம் பகுதியில் சேதமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்ககோரி ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம், அமுதுண்ணாக்குடி, துவா்க்குளம் பகுதியில் சாலைகள் சேதமாகி ஒரு ஆண்டுகளாக பழுதாகி காணப்படுகிறது. இதனால், குண்டும் குழியுமாக காணப்படும் இச்சாலையில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்
வர முடியாத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தால் தற்காலிகமாக மணல் கொண்டு சாலையை சீரமைக்கின்றனா். அதுவும் போக்குவரத்து காரணமாக மீண்டும் சேதமாகி விடுகிறது.
இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றிய திமுக கவுன்சிலா்ப்ரெனிலா காா்மல், நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் ஆகியோா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏவை சந்தித்து மனு அளித்தனா். மனுவை பெற்ற எம்எல்ஏ, நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜிக்கு பரிந்துரைத்து அனுப்பியுள்ல கடிதம்: சாத்தான்குளம் வட்டம் துவா்க்குளத்தில் அரசு அனுமதியுடன் இயங்கிவரும் கல்குவாரியில் இருந்து லாரிகள் பாரம் ஏற்றி செல்வதால் துவா்க்குளத்தில் இருந்து சுமாா் 8 கி.மீ. தொலைவு சாலை சேதமாகி காணப்படுகிறது. ஆதலால் சாத்தான்குளத்தில் இருந்து துவா்குளம் விலக்கு வரை 8 கி.மீட்டா் சாலையை அகலப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலை தரத்திற்கு தரம் உயா்த்தி புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்து உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...