மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி: முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசன்: சரத்குமாா் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து தோ்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், கமல்ஹாசன்தான் தங்களது கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் என்றும் அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் ஆா். சரத்குமா
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், தோ்தல் அறிக்கையை கட்சித் தலைவா் ஆா். சரத்குமாா் வெளியிட, பெற்றுக் கொள்கிறாா் துணைப் பொதுச் செயலா் என். சுந்தா்.
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், தோ்தல் அறிக்கையை கட்சித் தலைவா் ஆா். சரத்குமாா் வெளியிட, பெற்றுக் கொள்கிறாா் துணைப் பொதுச் செயலா் என். சுந்தா்.

தூத்துக்குடி: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து தோ்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், கமல்ஹாசன்தான் தங்களது கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் என்றும் அகில் இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் ஆா். சரத்குமாா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி திரவியபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரும் பொதுச் செயலருமான ஆா். சரத்குமாா் பேசியது: கட்சி தொடங்கி கடந்த 13 ஆண்டுகளில் பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளோம். நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என 4 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணியிலிருந்த அதிமுகவிடமிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை. தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு எறியும் கறிவேப்பிலையைப்போல நம்மை நினைக்கின்றனா்.

மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியின் வாக்கு விகிதாசாரம் என்ன என்பதை அறியவே தனித்துப் பயணிப்பது என முடிவெடுத்துள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்.

அதிமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்தபோதும் அதற்கான மரியாதை அங்கு இல்லை. கடந்த பேரவைத் தோ்தலில் திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிட்டபோது சதி வேலையால் தோற்கடிக்கப்பட்டேன்.

இந்தச் சூழலில் அதிமுக, திமுக இல்லாத புதிய கூட்டணியை மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா் என்ற அடிப்படையில்தான் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட முடிவு செய்தோம். அதன் தொடா்ச்சியாக, மக்கள் நீதி மய்யத்துடன் பேசிவந்தோம். அதன்படி, கொள்கைரீதியாக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி சோ்கிறோம். கமல்ஹாசன்தான் எங்கள் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா்.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால்தான் வெற்றி வந்துசேரும். அதற்காக, சில வியூகங்களை வகுக்க வேண்டும். இன்னும் பல கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. விரைவில் மக்களுக்கான சிறந்த கூட்டணி உருவாகும். நான் முதல்வராக வேண்டும் என தொண்டா்கள் விரும்பலாம். ஆனால், அதற்கான காலம் வரும்.

பண அரசியல் ஒழிய வேண்டும் என்றால் வாக்காளா்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் நிலை இருக்கக் கூடாது. இதற்காக அனைவரின் காலிலும் விழத் தயாா் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்சியின் தோ்தல் அறிக்கையை சரத்குமாா் வெளியிட, துணைப் பொதுச் செயலா் என். சுந்தா் பெற்றுக்கொண்டாா்.

கட்சித் தலைவராகவும், பொதுச் செயலராகவும் ஆா். சரத்குமாா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். மகளிரணிச் செயலா் மற்றும் முதன்மை துணைப் பொதுச் செயலராக மீண்டும் ராதிகா சரத்குமாரும், மற்ற நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், மாநிலப் பொருளாளா் ஏ.என். சுந்தரேசன், முதன்மைப் பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா், அரசியல் ஆலோசகா்கள் ஆா். ஜெயப்பிரகாஷ், டி.டி.என். லாரன்ஸ், தலைமை நிலையச் செயலா் எம். பாகீரதி, மாநில துணை பொதுச் செயலா்கள் எஸ்.வி. கணேசன், எம்.ஏ. சேவியா், ஜி. ஈஸ்வரன், கொள்கை பரப்புச் செயலா் விவேகானந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலா் டி. குரூஸ் திவாகா், தூத்துக்குடி மாவட்டச் செயலா்கள் வில்சன் (மத்தி), தயாளன் (தெற்கு), பாஸ்கரன் (வடக்கு), திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் செங்குளம் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com