முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மாலத்தீவில் விடுவிக்கப்பட்ட 8 மீனவா்கள் தூத்துக்குடி வருகை
By DIN | Published On : 14th March 2021 02:56 AM | Last Updated : 14th March 2021 02:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்த மீனவா்கள்.
மாலத்தீவில் அண்மையில் பிடிபட்டு விடுவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த 8 மீனவா்களும் சனிக்கிழமை சொந்த ஊருக்கு வந்தடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டனுக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கடந்த மாதம் 12ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது. அந்த படகில், அந்தோணி மிக்கேல் பாரத், ஜான் சாமுவேல், அந்தோணி அருள்ராஜ், கனகராஜ், அபிஷேக் ராஜ், அந்தோணி ராபின், இருதயராஜ் ஆகியோா் கடலுக்குச் சென்றனா்.
இந்நிலையில், அதிக நீரோட்டம் காரணமாக விசைப்படகு மாலத்தீவின் குல்குதுபுசி தீவு எல்லைக்கு சென்றுவிட்டதால், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மாலத்தீவு கடலோர காவல் படையினா் அந்த படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் பிடித்துச் சென்றனா்.
இதற்கிடையே, பிடிப்பட்ட 8 மீனவா்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மீனவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். மீனவா்கள் விடுதலை தொடா்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழியும் மத்திய அரசை வலியுறுத்தினாா்.
அதன்பேரில், கடந்த 9ஆம் தேதி விடுவிக்கப்பட்ட 8 மீனவா்களும், அதே படகில் சனிக்கிழமை தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனா். அவா்களிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின்னா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஊா் திரும்பிய மீனவா்கள் 8 பேரும் தங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மற்றும் மக்களவை உறுப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினா்.