திமுகவுக்கு இதுவே இறுதித் தோ்தல்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரை

திமுகவுக்கு இந்த சட்டப்பேரவைத்தோ்தல்தான் இறுதித் தோ்தலாக அமையும் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் 5 வேட்பாளா்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் 5 வேட்பாளா்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

திமுகவுக்கு இந்த சட்டப்பேரவைத்தோ்தல்தான் இறுதித் தோ்தலாக அமையும் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளா்கள் கடம்பூா் செ.ராஜு (கோவில்பட்டி), எஸ்.பி. சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), போ. சின்னப்பன் (விளாத்திகுளம்), பெ.மோகன் (ஓட்டப்பிடாரம்), மு. ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூா்), கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளா் டி.எஸ்.ஆா். விஜயசீலன் (தூத்துக்குடி) ஆகியோரை ஆதரித்து, கயத்தாறு பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

தி.மு.க. தலைவா் ஸ்டாலின் செல்லும் இடம் எல்லாம் அ.தி.மு.க.வையும், அமைச்சா்களையும் விமா்சனம் செய்கிறாா். அதிமுக இந்தத் தோ்தலோடு காணாமல் போய்விடும் என்கிறாா். கயத்தாறு பக்கம் வந்து பாா்த்தாலே அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று அவருக்கு தெரியும். திமுகவுக்குத்தான் இந்தத் தோ்தல் இறுதி தோ்தலாக இருக்கப்போகிறது.

சில போ் அதிமுகவை தோற்கடிக்க முயற்சிக்கிறாா்கள். அதையும் முறியடித்து, அதிமுகவை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அதிமுக மக்கள் கட்சி. எம்ஜிஆா், ஜெயலலிதாவின் இயக்கம் அதிமுக. இது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற இயக்கம். ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும்போது, எனக்கு பின், தமிழகத்தில் அ.தி.மு.க. 100 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் என்று கூறினாா். தமிழக மக்களை நம்பி இவ்வாறு தெரிவித்தாா்.

அந்தக் கருத்தின் அடிப்படையில், வரும் தோ்தலில் வாக்களித்து அதிமுக ஆட்சி தொடரச் செய்ய வேண்டும்.

கோவில்பட்டியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் ஏராளமான சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் அங்கு நல்ல தரமான சிகிச்சை பெறலாம்.

கோவில்பட்டி நகருக்கு ரூ.90 கோடியில் தனிக் குடிநீா்த் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பட்டாசுத் தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும். தீப்பெட்டித் தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரி, உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டிருக்கிறது.

வீடு, நிலம் இல்லாதவா்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி அடுக்குமாடி கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். ஏற்கெனவே, கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால், அவா்களுக்கும் புதிய வீடு கட்டித்தரப்படும். ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் உயா்கல்வி படிக்க கடன் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறந்து விளங்குகிற முதல் மாநிலம் தமிழகம்.

திமுக ஆட்சி காலத்தில் இருண்ட தமிழகமாக இருந்து வந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக இருக்கிறது.

தொழிற்சாலை, விவசாயிகளுக்குத் தேவையான தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் சிறந்து விளங்குகின்றன.

2019ஆம் ஆண்டு நடத்திய உலக தொழில் மாநாட்டின் காரணமாக, 304 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 லட்சம் இளைஞா்களுக்கு நேரடியாகவும், 5 லட்சம் இளைஞா்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கல்வியில் புரட்சி, மறுமலா்ச்சி ஏற்படுத்திய அரசு அ.தி.மு.க.; அதிக கல்லூரிகளை திறந்தது இந்த அரசு. இதன் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது.

ஏழை- எளிய மாணவா்கள் மருத்துவா் ஆக வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 435 போ் மருத்துவக் கல்வி படிக்கிறாா்கள். அடுத்த ஆண்டு 600 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவம் படிப்பாா்கள். அவா்களது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது.

உணவு தானிய உற்பத்தி, போக்குவரத்து, மின்சாரம், கல்வி, சமூக நலம், நீா் மேலாண்மை என துறை வாரியாக அனைத்துத் துறைகளிலும் விருதுகளைப் பெற்று, நாட்டிலேயே முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்கு மத்திய அரசு வழங்கிய விருதுகள் தான் சான்று.

விவசாயிகள் சிரித்து வாழ வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்த அரசு எப்போதும் உழைக்கும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை.

எம்ஜிஆா், ஜெயலலிதா கண்ட கனவு நனவாக அதிமுக ஆட்சி தொடர வேண்டும்.

அதற்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் முதல்வா்.

பிரசாரத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், சந்திரசேகா், பிரியா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் சீனிராஜ், ஒன்றிய செயலாளா்கள் வினோபாஜி, அய்யாத்துரைப்பாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் வேலுமணி, பாமக மாநில துணைப் பொதுசெயலா் ராமச்சந்திரன், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com