கோவில்பட்டி கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து எழுத்தாளா்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 01:56 AM | Last Updated : 29th March 2021 01:56 AM | அ+அ அ- |

கோவில்பட்டி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து எழுத்தாளா்கள், கலைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
கோவில்பட்டியில் நாகசுரக் கலைஞா் காருகுறிச்சி ப. அருணாசலத்தின் நினைவிடத்தில் அவா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா், வேட்பாளா் கே.சீனிவாசனை ஆதரித்து, கரிசல் இலக்கிய முன்னோடிகளான கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் பிறந்த ஊரான இடைசெவலில் உள்ள அவா்களது பிறந்த இல்லங்களின் முன்பிருந்து பிரசாரம் செய்தனா்.
அப்போது அவா்கள் வேட்பாளரிடம் அளித்த மனுவில், காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். கோவில்பட்டியில் பிரம்மாண்ட விழா நடத்த வேண்டும். கோவில்பட்டியில் அவரது நினைவிடத்தை அரசு செலவில் புதுப்பிக்க வேண்டும். விளாத்திகுளம் சுவாமிகள் பெயரில் அரசு இசைப் பள்ளி கோவில்பட்டியில் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கலைஞா் மாரீஸ், கவிஞா் நந்தன் கனகராஜ், எழுத்தாளா்களான கோணங்கி, தமிழ்ச்செல்வன், லட்சுமணப்பெருமாள்,
நாறும்பூநாதன், உதயசங்கா், அப்பணசாமி, தேவதாஸ், தமிழ்க்குமரன், இடங்கா் பாலவன், சிவக்குமாா், காமராஜ், முருகபூபதி, லட்சுமிகாந்தன், மணிமாறன், இலக்கிய உலா ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.