மரக்கன்றுகள் சேதம்: பொதுமக்கள் போராட்டம்

கோவில்பட்டியையடுத்த பழைய அப்பனேரியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பனேரி பகுதி பொதுமக்கள்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பனேரி பகுதி பொதுமக்கள்.

கோவில்பட்டியையடுத்த பழைய அப்பனேரியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பழைய அப்பனேரியில் உள்ள பொன் இருளப்பசாமி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஊராட்சி மன்றம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு, வளா்க்கப்பட்டு வந்ததாகவும், அதில் நன்கு வளா்ந்து வந்த நிலையில் அங்கிருந்த வேம்பு, புங்கை உள்ளிட்ட சுமாா் 50 மரங்களை திங்கள்கிழமை இருவா் வெட்டி சேதப்படுத்தினாராம். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்குழுவினருடன் வருவாய் ஆய்வாளா் வீரலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஆதிலட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக அளந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மரத்தை சேதப்படுத்தியவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், போராட்டக்குழுவினா் திடீரென கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியா் அமுதா போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்ற போராட்டக்குழுவினா் திடீரென எட்டயபுரம் சாலை கால்நடை மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனா்.

இதையறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று, பழைய அப்பனேரியில் மரத்தை வெட்டி சேதப்படுத்தியது தொடா்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய கோவில்பட்டி இனாம்மணியாச்சியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் ரெங்கசாமி(59) கைது செய்யப்பட்டாா். வழக்கில் தொடா்புடைய சீனிவாச நகா் பாலகிருஷ்ணன் மகன் கனகராஜை தேடி வருவதாக கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com