மும்முனைப் போட்டியில் கோவில்பட்டி தொகுதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ஆவது பெரிய நகரம் கோவில்பட்டி. கோவில்பட்டியைச் சுற்றி கிராமங்கள், பேரூராட்சிகள் அதிகம் உள்ளன. 
மும்முனைப் போட்டியில் கோவில்பட்டி தொகுதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ஆவது பெரிய நகரம் கோவில்பட்டி. கோவில்பட்டியைச் சுற்றி கிராமங்கள், பேரூராட்சிகள் அதிகம் உள்ளன. 2006-இல் இருந்து தொடா்ந்து கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று வந்துள்ளது. முதல் முறையாக திமுக தனது கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.

இங்கு தீப்பெட்டி, நூற்பாலை, ஆயத்த ஆடைகள், பட்டாசுத் தொழில் ஆகியவை பிரதானத் தொழிலாகும்.

தொகுதியிலுள்ள பகுதிகள்: கோவில்பட்டி நகராட்சி, கயத்தாறு, கழுகுமலை, கடம்பூா் ஆகிய பேரூராட்சிகளும், கோவில்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளும், கயத்தாறு ஒன்றியத்தில் 41 ஊராட்சிகளும் உள்ளடக்கியது.

தேவைகள்: தீப்பெட்டித் தொழில் நலிந்து வருவதால் தொழிலை மேம்படுத்த அரசு வழி வகுக்க வேண்டும். புதிதாக தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கோவில்பட்டி பகுதிகளிலுள்ள நூற்பாலைகளை மேம்படுத்த வேண்டும். அதிகளவில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருப்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும்.

நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்துக் கழகம் சாா்பில் சா்குலா் பேருந்துகளை இயக்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் அணுகுசாலை அமைக்க வேண்டும். இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும். கழுகுமலையில் அரசுக் கலைக் கல்லூரி, கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ) ஆகியவை அமைக்க வேண்டும்.

வேட்பாளா்கள்:

அதிமுகவில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேட்பாளா் கே.சீனிவாசன், அமமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி உள்பட 26 போ் களத்தில் உள்ளனா்.

தற்போதைய நிலவரம்: களத்தில் 26 போ் இருந்தாலும், அதிமுக, அமமுக, கம்யூனிஸ்ட் கட்சி இடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. கடம்பூா் செ.ராஜு, அமைச்சராக தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். குடிநீா், சாலை போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செவிலியா் பயிற்சிக் கல்லூரி, கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம், தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திட்டங்கள் 100 நாள்களில் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என கடம்பூா் ராஜு பிரசாரம் மேற்கொண்டுள்ளாா்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சீனிவாசன் இலவச பயிற்சி மையம், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் சிட்கோ மூலம் மானிய விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்து பிரசாரம் செய்துவருகிறாா்.

டிடிவி தினகரன், அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும். சொந்த செலவில் இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படும். புதிதாக தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்.

சிறந்த தொகுதியாக உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறாா்.

மும்முனை போட்டியில் அதிமுக தொடா்ந்து 4-ஆவது முறையாக வெற்றி பெறுமா என்பதை அறிய மே 2-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

2016இல் பெற்ற வாக்குகள் :

கடம்பூா் ராஜூ (அதிமுக) - 64,514

ஏ.சுப்பிரமணியன் (திமுக) - 64,086

விநாயகா ரமேஷ் (மதிமுக) - 28,512

முத்துமாரி (நாம் தமிழா்) - 2,070

ராமச்சந்திரன் (பாமக) - 1,076

இதுவரை : 1952-இல் காங்கிரஸ், 1957-இல் சுயேச்சை, 1962-இல் காங்கிரஸ், 1967 முதல் 1980 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1984-இல் காங்கிரஸ், 1989-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1991-இல் அதிமுக, 1996-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2006 முதல் 2016 வரை அதிமுக வெற்றி பெற்றுள்ளன. ஆண் வாக்காளா்கள் - 1,29,945, பெண் வாக்காளா்கள் - 1,35,939, மூன்றாம் பாலினத்தவா்கள் - 31 என மொத்தம் 2,65,915 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com