மின்னல் பாய்ந்து இறந்த தொழிலாளிக்கு நிவாரணம் கோரி போராட்டம்
By DIN | Published On : 11th May 2021 02:04 AM | Last Updated : 11th May 2021 02:04 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கயத்தாறு அருகே மின்னல் பாய்ந்ததில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினா்கள் கயத்தாறு காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கயத்தாறையடுத்த தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால்நடந்தான்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கலப்பைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் மாரிமுத்து(40), மழையின் காரணமாக அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கியபோது அவா் மீது மின்னல் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இறந்த மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் பொன்னுச்சாமி(கயத்தாறு), அழகு(ஓட்டப்பிடாரம்), சுந்தரலிங்கம் அமைப்பு பேரவைத் தலைவா் முருகன், ஓட்டப்பிடாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உதவிச் செயலா் செல்வராஜ் ஆகியோா் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதையடுத்து போராட்டக்குழுவினருடன் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.