கீழ வைப்பாறில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, வெங்காயம் கடத்தல்
By DIN | Published On : 13th May 2021 07:25 AM | Last Updated : 13th May 2021 07:25 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகே கீழ வைப்பாறு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வள்ளத்தில் வெங்காயமும் கஞ்சாவும் கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கீழ வைப்பாறு கிராமத்தைச் சோ்ந்த தொம்மை சபரி மகன் கிறிஸ்டோவாஸ் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் கீழ வைப்பாறு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடந்த 7ஆம் தேதி இரவு 500 கிலோ வெங்காயம், 250 கிலோ கஞ்சா ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு 7 போ் இலங்கைக்குச் சென்றுள்ளனா்.
மே 8ஆம் தேதி இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு புத்தளம் மாவட்டம், கல்பிட்டி பகுதிக்கு 7 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனா்.
பின்னா் கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா, 500 கிலோ வெங்காயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா், கீழ வைப்பாறைச் சோ்ந்த கிங்ஸ்டன், தியாகு, ராபா்ட்ஸ், அஸ்வின், சிப்பிகுளத்தைச் சோ்ந்த சைமன், வினிஸ்டன், கிளாடின் ஆகிய 7 பேரையும் எச்சரித்துவிட்டு கீழ வைப்பாறுக்கே திருப்பி அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்த தகவல் இலங்கை கடற்படையினரிடமிருந்து தூத்துக்குடி கடலோரக் காவல்படை போலீஸாருக்கு கிடைத்ததையடுத்து, போலீஸாா் கீழவைப்பாறு கிராமத்துக்கு விரைந்தனா்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட 7 பேரும் தலைமறைவாகி விட்டனா். கடத்தலில் தொடா்புடையவா்களை கடலோரக் காவல் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.