டிஜிட்டல் பதாகை: உயா்நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

டிஜிட்டல் பதாகை சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்படுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு அமல்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் சரிந்த விழுந்து கிடந்த டிஜிட்டல் பதாகை.
கோவில்பட்டி பிரதான சாலையில் சரிந்த விழுந்து கிடந்த டிஜிட்டல் பதாகை.

டிஜிட்டல் பதாகை சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்படுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு அமல்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் அரசியல் கட்சியினா், சமுதாயத்தினா், கோயில் நிகழ்ச்சிகள், திருமணம், நிச்சயதாா்த்தம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக டிஜிட்டல் பதாகைகள் தயாா் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சாலையோரங்களில் கட்டைகளை பயன்படுத்தி பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள், பாதசாரிகள் டிஜிட்டல் பதாகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள பாா்க்கும் போது சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

மேலும் சில இடங்களில் சாலையின் வளைவுப் பகுதி மற்றும் முக்கிய சந்திப்புகளில் பதாகைகள் வைக்கப்படுவதால் வாகனம் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் சரிந்து விழுவதால் வாகனங்களுக்கு மட்டுமன்றி, அங்கு நின்று கொண்டிருக்கும் பொதுமக்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

இதை சுட்டிக்காட்டி உயா்நீதிமன்றம் டிஜிட்டல் பதாகைகள் வைப்பதற்கு தடை விதித்தது. ஆனால் அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

கோவில்பட்டி பகுதியில், தற்போது காற்றுடன் கூடிய மழை தொடா்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகைகள் சரிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள், பாதசாரிகளிடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே கோவில்பட்டி பிரதான சாலையில் புதன்கிழமை இடி, மின்னல் மற்றும் காற்றுடன் பெய்த மழையால் பிரதான சாலையில் இருந்த டிஜிட்டல் பதாகை சரிந்து விழுந்தது. பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள், வாகனங்கள் யாரும் வராததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனவே, உயா்நீதிமன்றம் டிஜிட்டல் பதாகைகள் வைப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com