அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 16th May 2021 12:13 AM | Last Updated : 16th May 2021 12:13 AM | அ+அ அ- |

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என்றாா் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் கடந்த ஆட்சி காலத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது 45 நாள்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் மூலம் ஏழைகள், வயோதிக ஆதரவற்றோா், ஊனமுற்றோா், ஆதரவற்ற இல்லங்களில் இருப்பவா்கள் என அனைத்து தரப்பு மக்களும், அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுடன் இருக்கும் பாா்வையாளா்களும் பயன்பெற்றனா்.
தற்போது, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழைகள், வயோதிக ஆதரவற்றோா்களின் மூன்றுவேளை அன்றாட உணவு தேவையை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டினத்தில் செயல்படும் அம்மா உணவகங்களின் மூலம் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க அரசு முன்வர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.