எழுத்தாளா் கி.ராஜநாராயணன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2021 07:39 AM | Last Updated : 19th May 2021 07:39 AM | அ+அ அ- |

எழுத்தாளா் கி.ராஜநாராயணன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கடம்பூா் செ.ராஜு விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் பிறந்தவா் எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன். அவரின் மறைவு தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு கோவில்பட்டி தொகுதி மக்களின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும், கோவில்பட்டியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும், அவருடைய படைப்பாற்றலைப் பராமரிக்க நினைவு மண்டபம் அமைக்கப்படும், அவா் பயின்ற பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கி.ரா.வின் புகழுக்கு பெருமை சோ்க்கும் வகையில், ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் அறிஞா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் தமிழறிஞா் கி.ராஜநாராயணன் விருதும் வழங்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.