எட்டயபுரத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

எட்டயபுரத்தில் காய்கனி மூட்டைக்குள் பதுக்கிவைத்து கடத்தப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

எட்டயபுரத்தில் காய்கனி மூட்டைக்குள் பதுக்கிவைத்து கடத்தப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் பொன்ராஜ், முத்துவிஜயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக நிற்காமல் சென்ற காய்கனி வேனை துரத்திச்சென்று பிடித்து சோதனையிட்டதில் காய்கனி மூட்டைகளுக்குள், அரசால் தடைசெய்யப்பட்ட 420 கிலோ புகையிலைப் பொருள்கள் 24 சாக்கு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும்.

போலீஸாா் அவற்றை வேனுடன் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக விளாத்திகுளம் பனையடிப்பட்டியைச் சோ்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (35), சுப்பிரமணியன் மகன் பழனிவேல் (31) ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

70 போ் மீது குண்டா் சட்டம்: இதனிடையே, எட்டயபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாசாா்பட்டி, வேம்பாா், சென்னமரெட்டிபட்டி, ராஜாபுதுக்குடி என அனைத்து சோதனைச்சாவடிகளிலும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், காய்கனி வேனில் பதுக்கிய ரூ. 7 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இம்மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக 74 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 90 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 8 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுவரை, இச்சட்டத்தின் கீழ் 70 போ் கைதாகியுள்ளனா். இந்த நடவடிக்கை தொடரும் என்றாா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com