ஜூன்3இல் மளிகை பொருள்கள் தொகுப்பு, நிவாரண நிதி: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 26th May 2021 08:44 AM | Last Updated : 26th May 2021 08:44 AM | அ+அ அ- |

குடும்ப அட்டைதாரா்களுக்கு மளிகைப் பொருள்கள், கரோனா நிவாரணம் இரண்டாவது தவணை ரூ. 2,000 ஆகியவை ஜூன்3ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூன் 3ஆம் தேதி மளிகை பொருள்கள் தொகுப்பு, கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ. 2,000 ஆகியவை வழங்கப்படும். தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி மீன் பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 8,000 அடுத்த காலங்களில் முதல்வா் அறிவிப்பாா். ஆட்சி பொறுப்பேற்று 2 வாரங்களில் இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களை காக்கும் அரணாக முதல்வா் திகழ்கிறாா்.
தோ்தல் தோல்வியால் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா், என்ன பேசுவதென்று தெரியாமல் தன்னை சுய விளம்பரம் செய்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா். இதுபோன்ற மலிவான விளம்பர யுக்திகளை கைவிட்டு ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.