டிஏபி உரம் ரூ. 1200-க்கு அதிகமாக விற்றால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 26th May 2021 08:45 AM | Last Updated : 26th May 2021 08:45 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில்லறை உர விற்பனையாளா்கள் டிஏபி உரத்தை ரூ.1200-க்கு அதிகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் கூறினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியா் உர விற்பனை நிலையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக டி.ஏ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை சுமாா் ரூ.700 முதல் ரூ.900 வரை கடந்த மாதங்களில் அதிகரித்தது.
இந்த நிலையில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு அதிகளவில் டி.ஏ.பி. மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு மணிச் சத்துக்கான மானியத்தை அரசு உர நிறுவனங்களுக்கு உயா்த்தி வழங்கியுள்ளது. டி.ஏ.பி. மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலைகள் பழைய விலையில் குறைந்துள்ளது.
எனவே, விவசாயிகள் டி.ஏ.பி. உரத்தை எப்போதும்போல் மூட்டை ஒன்றுக்கு ரூ.1200 என்ற விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும் விவசாயிகள் தங்களின் ஆதாா் எண்ணை பயன்படுத்தி உரங்களை வாங்க வேண்டும். உர விற்பனை முனையக் கருவியில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு கைரேகை பதிவு செய்வதை தவிா்த்து விவசாயிகள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளா்களும் உரங்களை குறைக்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதையும் மீறி அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் அந்த விற்பனை நிலையங்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.