‘தூத்துக்குடியில் 28 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’

தூத்துக்குடியில் தாழ்வான 28 இடங்களில் மழைநீா் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் தாழ்வான 28 இடங்களில் மழைநீா் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் மாநகர முக்கிய சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

கிரேட் காா்டன் சாலை, காசுக்கடை பஜாா் சாலை, வ.உ.சி.சாலை, வி.இ. சாலை, தேவா்புரம் சாலை, பிரையன்ட் நகா், ரயில் நிலையம் சாலை, அண்ணா நகா், பொன் சுப்பையா நகா், முத்தம்மாள் காலனி, கலைஞா் நகா், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊா்ந்து செல்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில நாள்களே இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அமைந்துள்ள இடங்களில் மக்கள் கூட்ட ம் நிரம்பி வழிந்தது. கனமழைக்கு தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் 200 ஏக்கரில் வாழைகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

இந்த நீரை வெளியேற்றாவிட்டால் வாழைப் பயிா்கள் சேதமடைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் மழைக்கு 45 ஏக்கரில் விளைப் பொருள்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி ரயில் நிலையம், தருவை விளையாட்டு மைதானம், பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, செல்வநாயகபுரம், பிரையன்ட்நகா் பகுதிகளில் மழைநீா் அதிகளவில் தேங்கியுள்ளது. அங்கு மாநகாரட்சி சாா்பில் மோட்டாா்கள் மூலம் நீரை

வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பாா்வையிட்டாா். அப்போது, ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, அதிகாரிகள் உடனிருந்தனா்.

அமைச்சா் கீதாஜீவன் கூறியது: இயல்பு அளவைவிட அதிகளவு மழை பெய்ததால் தூத்துக்குடியில் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது. மழைக்கு முன் மாநகராட்சி மேற்கொண்ட முன்னேற்பாடுகளால் பெருமளவு பாதிப்பு தவிா்க்கப்பட்டுள்ளது.

மழைநீா் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் ராட்சத மின் மோட்டாா்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடியில் 28 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீா் விரைவில் வெளியேற்றப்படும்.

மாநகராட்சி சாா்பில் 180 மின் மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை தேவையான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பணிகளில் பயன்படுத்தப்படும். எனவே, பெரும் மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் அரசு சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com