கோவில்பட்டி: சுரங்கப் பாதையில் சிக்கிய கார்

கோவில்பட்டியில் மழை நீர் தேங்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய காரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 
கோவில்பட்டி: சுரங்கப் பாதையில் சிக்கிய கார்


கோவில்பட்டியில் மழை நீர் தேங்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய காரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 

தீபாவளி பண்டிகை அன்று கோவில்பட்டியில்  2 மணி நேரமாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை நேரத்தில் கனமழை பெய்ததால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட காரை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர்.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் வியாழக்கிழமை காலை நேரத்தில் லேசான வெயில் இருந்து வந்தது. பின்னர், மாலை 5 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, 5.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பின்னர், 9 மணி வரையிலும் தூரல் விழுந்து கொண்டே இருந்தது.

கோவில்பட்டி நகர்ப்பகுதி மற்றும் இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம், இலுப்பையூரணி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டது. மேலும், நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  

இதனால், இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அவ்வழியே சென்ற கார் ஒன்று, சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்டது. கார் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் காரை நகர்த்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மழையில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், சிறிது நேரத்தில், அங்கிருந்து கார் மீட்கப்பட்டது.

சுரங்கப்பாதையில் அதிக மழைநீர் தேங்கிக்கொண்டதால், சுரங்கப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் இரு மார்க்கத்திலும் பேரிகார்டு வைத்து, போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.

வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் லட்சுமி மில் மேம்பாலம், பைபாஸ் வழியாகத்தான் சுற்றி சென்று வந்தன. தீபாவளி பண்டிகை என்பதால், காலை நேரங்களில் பொதுமக்கள் கோயில்களுக்கு அதிகம் சென்று வந்தனர். தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

தீபாவளி பண்டிகையின்போது, வழக்கமாக பகல் நேரத்தை விட மாலை நேரத்தில்தான் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வானவெடி, தரைசக்கரம், புஸ்வானம் போன்ற வெடிகளை அதிகளவு வெடித்து மகிழ்வார்கள்.

ஆனால், தீபாவளியான வியாழக்கிழமை மாலை நேரத்தில் கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால், இளைஞர்கள் வெடி வெடித்து தீபாவளியை கொண்டாடுவது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சிறுவர், சிறுமிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து மக்களும் கவலையடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com