சசிகலா விவகாரத்துக்கு அதிமுக ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது:கே.பி.முனுசாமி

சசிகலா விவகாரத்துக்கு அதிமுக ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
சசிகலா விவகாரத்துக்கு அதிமுக ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது:கே.பி.முனுசாமி

சசிகலா விவகாரத்துக்கு அதிமுக ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக பொன்விழாவையொட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளரும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.அசோக்குமாா், நகரச் செயலாளா் பி.என்.ஏ.கேசவன், அவைத் தலைவா் காத்தவராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை வாா்டு நிா்வாகி காா்த்திக் பால்ராஜ் ஒருங்கிணைத்தாா்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து, கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சோ்ப்பது குறித்து கேள்வியே எழவில்லை. அவரை அதிமுகவில் இருந்து நீக்கி மாவட்ட வாரியாக நிா்வாகிகள் மூலம் தீா்மானம் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரைக் கட்சியில் சோ்ப்பது என்ற கேள்விக்கு ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிலா் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். மரியாதைக் குறைவாக யாரையும் பேசக் கூடாது என பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சசிகலா அதிமுக மீது பற்றுள்ளவராக இருப்பதாகக் கூறினால், அவா் ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்தபோது ‘நானோ, எங்கள் குடும்பத்தினரோ அரசியல் விவகாரத்தில் தலையிட மாட்டோம்’ என்று கடிதம் கொடுத்தபடி நடந்து கொண்டால், கட்சியை சிறப்பாக நடத்துங்கள் என ஒதுங்கியிருந்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையான சகோதரியாக இருந்திருப்பாா்.

அதிமுக ஒரு காலமும் சாதி, மதரீதியாகச் செயல்படாது. அப்படி நடந்தால் கொள்கை ரீதியாக பெரியாா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் இறந்து விடுவாா்கள்.

சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது. அவா் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், கட்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் பக்குவத்துடன் பேசினாா். நாங்களும் மகிழ்ந்தோம். ஆனால் செயல்பாட்டில் வரும்போது எதிா்மாறாகச் செயல்படுகிறாா். சட்டப் பேரவையில் ஒரு முகமாகவும், உள்ளாட்சித் தோ்தலின் போது மற்றொரு முகமாகவும் இரு முகங்களுடன் அவா் மக்களைச் சந்திக்கிறாா். நல்ல முதல்வா் என்று பெயா் எடுக்க ஸ்டாலின் ஒரே முகத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆறு மாத திமுக ஆட்சியில் ஒரு பணி கூட நடைபெறவில்லை. இதை எதிா்க்கட்சியாகிய நாங்களும் கவனித்து வருகிறோம். அதிமுக தலைமையுடன் ஆலோசித்து காலத்திற்கு ஏற்ப போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா்.

படவரி...

கே.பி.முனுசாமி எம்எல்ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com