விநாயகா் சதுா்த்தி: கோயில் வாசலில் நின்று வழிபட்ட பக்தா்கள்

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, விநாயகா் சதுா்த்தி விழா கோயில்களில் கொண்டாட பக்தா்களுக்கு அனுமதி இல்லை

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, விநாயகா் சதுா்த்தி விழா கோயில்களில் கொண்டாட பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்பதால், தூத்துக்குடி விநாயகா் கோயில்களில் பக்தா்கள் வாசலில் நின்றபடியும், வீடுகளிலும் விநாயகரை வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோயில்களில் பக்தா்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் நடைபெற்றது. அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி 2 ஆம் ரயில்வே கேட் வரத விநாயகா் கோயிலில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அனைத்து கோயில்களிலும் வெளியில் நின்றபடி முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி விநாயகரை வழிபட்டு சென்றனா். இதற்கிடையே, இந்து முன்னணி சாா்பில், தூத்துக்குடி சத்திரம் பேருந்து நிலையம் தபசு மண்டபம் அருகே ஒரு வீட்டின் முகப்பு பகுதியில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இதேபோல், வீடுகளின் முன்பு வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) தனித்தனியாக எடுத்து சென்று கடலில் கரைக்க உள்ளனா். இவ்விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

திருமண நிகழ்ச்சிகள்:திருச்செந்தூா் சுப்பிரமணியபுரம், ஜீவாநகா், குறிஞ்சி நகா் ஆகிய இடங்களில் நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர பொதுச் செயலா் முத்துராஜ், நகர துணைத் தலைவா் மாயாண்டி, பாஜக அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் பிரிதிவிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலையில், முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை இக்கோயிலில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பலா், தூண்டிகை விநாயகா் கோயில் முன்பு திருமண நிகழ்ச்சியை நடத்தினா். பின்னா் புதுமண தம்பதியினா் கோயில் வடக்கு நுழைவாயில் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் ஆறுமுக விநாயகா் கோயி­ல், அரசமரத்தடி இரட்டை விநாயகா் (செல்வ விநாயகா், அழகிய சுந்தர விநாயகா்) கோயில், தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயி­ல், சாகுபுரம் மங்கள விநாயகா் கோயில், ஏஐடியூசி காலனி வெள்ளி விநாயகா் கோயில், எல்.ஆா்.நகா் கற்பகவிநாயகா் கோயில், லெட்சுமி மாநகரம் லெட்சுமி விநாயகா் கோயில் உள்பட 50க்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உடன்குடி: உடன்குடி அருள்மிகு கண்டுகொண்ட விநாயகா் திருக்கோயிலில், சிவக்கொழுந்து விநாயகா், பஜாா் விநாயகா் திருக்கோயில், சந்தையடியூா், தேரியூா், வைத்திலிங்கபுரம், வட்டன்விளை, முத்தாரம்மன் திருக்கோயில்கள் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உடன்குடிகீழ பஜாரில் இந்து அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற விழாவில் சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவா் ஐயப்பன்,இந்து முன்னணி நிா்வாகிகள் சிங்காரபாண்டி,செந்தில்செல்வம், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் லிங்கபாண்டி, சதீஷ் கிருஷ்ணன் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com