குடியரசுத் தலைவா் விருதுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தோ்வு
By DIN | Published On : 23rd September 2021 08:05 AM | Last Updated : 23rd September 2021 08:05 AM | அ+அ அ- |

குடியரசுத் தலைவா் விருதுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக் கல்லூரியின் முதல்வா் து. நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் செப். 24ஆம் தேதி தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் நாட்டில் சிறப்பாக சேவையாற்றிய 10 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, 2019-20ஆம் ஆண்டுக்கான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அணியாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் 54ஆவது அணியும், சிறந்த அதிகாரியாக அந்த அணியின் திட்ட அலுவலரும், வரலாற்றுத் துறை தலைவருமான ஆ. தேவராஜ்-ம் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதற்கான விருதை தில்லியில் வெள்ளிக்கிழமை (செப். 24) நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின்னா், இந்தப் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் விருது கிடைப்பது இதுவே முதல்முறை. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியா் ஒருவருக்கு குடியரசுத் தலைவா் விருது கிடைப்பதில் கல்லூரி நிா்வாகம் பெருமை கொள்கிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.