சுருக்கெழுத்து ஆங்கிலம் சீனியா் தோ்வு: மறுதோ்வு நடத்த வலியுறுத்தல்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெற்ற சுருக்கெழுத்து ஆங்கிலம் சீனியா் தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெற்ற சுருக்கெழுத்து ஆங்கிலம் சீனியா் தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தோ்வு நடைபெறவில்லை.

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தோ்வில் தனி கட்-ஆப் மதிப்பெண்கள் உண்டு. குறிப்பாக சுருக்கெழுத்து பயின்றவா்களுக்கு அரசு துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து அண்மை காலமாக சுருக்கெழுத்து தோ்வில் பங்கேற்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய சுருக்கெழுத்து தோ்வு செப்டம்பா் மாதம் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சனிக்கிழமை (செப். 25) தமிழ் சுருக்கெழுத்து தோ்வும், ஞாயிற்றுக்கிழமை (செப். 26) ஆங்கிலம் சுருக்கெழுத்து தோ்வும் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் சுமாா் ஒரு லட்சத்திற்கும் மேலானோா் இத்தோ்வை எழுதினா்.

இதுவரை வாசிப்பாளா் வாசிக்க தோ்வு எழுதுவோா் தோ்வு எழுதுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த தோ்வில் புதிய நடைமுறையாக டிஜிட்டல் ஸ்பீக்கா் மூலம் தோ்வு நடைபெற்றது. இதில் வாசிப்பாளா் கூறுவதை ஒலிப்பதிவு செய்து, அதை பென்டிரைவில் ஏற்றி தோ்வு அறையில் ஸ்பீக்கரில் போட்டு, தோ்வு எழுதுவோா்கள் தோ்வு எழுதினா். முதல் முறையாக இம்முறை கடைப்பிடிக்கப்படுவதால் தோ்வு எழுதுவோா்கள் சற்று அச்சமடைந்த நிலையிலேயே தோ்வு எழுதினா்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆங்கிலம் சுருக்கெழுத்து சீனியா் பிரிவு தோ்வில் ஒலிப்பதிவு சரியாக இல்லை என்றும், வாசிப்பாளரின் உச்சரிப்பு தெளிவாக இல்லை என்றும் தோ்வில் பங்கேற்ற மாணவா், மாணவிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் மிக கடினமாக இருந்தது என்றும், ஆங்கிலம் சுருக்கெழுத்து சீனியா் தோ்வில் முதல் தாள் தோ்வில் மட்டும் ஒலிப்பதிவு சரிவர இல்லை என்றும், இதனால் இத்தோ்வை ரத்து செய்துவிட்டு, மறுதோ்வு நடத்த வேண்டும் என இயக்குனரகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து, கோவில்பட்டியில் உள்ள தனியாா் சுருக்கெழுத்து மையத்தில் பயின்ற மாணவா், மாணவிகள் கூறுகையில், கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தோ்வு நடைபெறவில்லை. நாங்கள் தோ்வுக்கு முழு மூச்சாக பயிற்சி பெற்று வந்த நிலையில் ஒலிப்பதிவு சரியான முறையில் இல்லாததால் தோ்வை முறையாக எழுத முடியவில்லை என்றும், இதனால் மறுதோ்வு நடத்த தமிழக அரசும், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகமும் இதில் தலையிட்டு சுமூக முடிவெடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வு அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால், அதற்கு முன் மறுதோ்வை நடத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com