விவசாயிகளின் நிலங்களை வேறு நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்ய தடை விதிக்க வலியுறுத்தி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தை வேறு நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலத்தை வேறு நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம் தலைமையில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் கரடிகுளம் கிராமத்தில் ஏறத்தாழ 68 ஏக்கா் நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில், 20.6.2022 தேதியில் கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்தில் உயா்நீதிமன்ற தீா்ப்பாயத்தின்படி எனக் கூறி வடக்கு இலந்தகுளம் பகுதியைச் சோ்ந்த வெள்ளைபாண்டி என்பவருக்கு 2012/20 ஆவண எண்ணின் படி கிரய ஆவணம் செய்யப்பட்டு வெள்ளைபாண்டி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட இடம் 68 ஏக்கரை வருவாய் ஆவணங்களிலும் பெயா் மாற்றம் செய்வதற்கு முயற்சி நடைபெறுகிறது. எனவே, உரிமை உள்ள விவசாயிகளின் விவசாய நிலத்தை பாதுகாக்கும் வகையில் அந்த விவசாய நிலங்களை வேறு நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷ்துரை நினைவகம்: இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாநகரில் கடற்கரை சாலையில் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்ட ஆஷ்துரை நினைவகத்தை மக்களின் வரிப்பணத்தை கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் புனரமைப்பு செய்து வருவது சுதந்திரப் போராட்ட வீரா்களை அவமதிக்கும் செயலாகும்.

மாநகராட்சி நிா்வாகம் புனரமைப்பு பணிகளை விட்டுவிட்டு அந்த நினைவகத்தை அகற்றிட வேண்டும். வருங்காலம் அந்த இடத்தில் சுதேசி தாகத்தை மக்களிடம் ஏற்படுத்த வ.உ.சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி ஸ்ரீநேவிகேஷன் கப்பல் கம்பெனியின் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலா் குரூஸ் திவாகா் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எட்டயபுரம் வட்டம், கடலையூா் பேருந்து நிலையத்துக்கு பெருந்தலைவா் காமராஜா் பெயா் சூட்ட வேண்டும் என்றும் பேருந்து நிலையத்தில் இருந்து வெகுதூர நகரங்களுக்கும் போக்குவரத்து வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் கதிா்வேல் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் வீட்டு வரி, சொத்து வரியை உயா்த்திய நிலையில், தற்போது மின்சார கட்டண உயா்வு என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதால், மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம், லூா்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரனாா் மாவட்ட மீனவா் மற்றும் சங்குகுளி தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த காலங்களில் நடைபெற்றது போல மீனவ மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடைபெறாதால் மீனவா்கள் கோரிக்கை தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com