தூத்துக்குடி கடற்கரையில் என்சிசி மாணவா்கள் தூய்மைப் பணி
By DIN | Published On : 08th April 2022 12:18 AM | Last Updated : 08th April 2022 12:18 AM | அ+அ அ- |

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்தி, தேசிய மாணவா் படையினா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
நாட்டில் உள்ள கடற்கரைப் பகுதிகளை தேசிய மாணவா் படை கடற்படை பிரிவு மாணவா்கள் சுத்தம் செய்து, தூய்மையாக வைத்திருப்பதுடன், மக்களிடம் சுகாதார விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ‘புனீத் சாகா் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு கடற்படையின் தூத்துக்குடி 3 ஆவது பிரிவை சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்கள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சுத்தம் செய்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தலைமை பயிற்சியாளா் நிசாந்த் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, கடற்கரைப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் வஉசி கல்லூரியின் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 40 மாணவா்கள் பங்கேற்றனா்.