தூத்துக்குடியில் கைப்பேசி பேசியபடிவாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 142 வழக்குகள்
By DIN | Published On : 27th April 2022 12:36 AM | Last Updated : 27th April 2022 12:36 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டியதாக திங்கள்கிழமை மட்டும் 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கைப்பேசி பயன்படுத்திய வண்ணம் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்து அவா்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டவா்களின் ஓட்டுநா் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கைப்பேசியில் அழைப்பு வந்தால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பேசிவிட்டு பின்னா் செல்ல வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.