முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 29th April 2022 11:59 PM | Last Updated : 29th April 2022 11:59 PM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.
தாமிரவருணி நதிக்கரைகளில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் முதலாவதாகவும், சூரிய அம்சமாகவும் விளங்கும் இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி கள்ளபிரான் வீதியுலா நடைபெற்றது.
5ஆம் திருநாளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வாா்திருநகரி பொலிந்துநின்ற பிரான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள், நத்தம் எம்இடா்கடிவான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வாரின் மங்களாசாசனம் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியாக 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமி கள்ளபிரான் காலை 5.30 மணி அளவில் திருத்தேரில் எழுந்தருளினாா். காலை 8.30 மணிக்கு பக்தா்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். ரத வீதிகளைச் சுற்றி மாலை 6 மணிக்கு தோ் நிலையம் வந்தடைந்தது.
மின் பணியாளா்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்கம்பங்களில் ஏறி மின்கம்பிகளை அகற்றி திருத்தேரோட்டம் தடையின்றி நடைபெற உதவினா்.
ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாரும், ஊா்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.