முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் ரூ. 12 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ. 12 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை கைப்பற்றி, இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக செம்மரக்கட்டைகள் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியாா் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கா்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருப்பூரில் இருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கடந்த 26 ஆம் தேதி சிப்காட் தனியாா் சேமிப்பு கிடங்குக்கு கொண்டுவரப்பட்ட இரும்பு குழாய்கள் அடங்கிய சரக்குப் பெட்டகத்தை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, அந்த சரக்குப் பெட்டகத்தில் இருந்த 9 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மேல் பகுதியில் இரும்பு குழாய்களும், அடிப்பகுதியில் கருப்பு பாலித்தீன் தாள் (பிளாஸ்டிக் ஷீட்) மூலம் சுற்றப்பட்ட 7 டன் செம்மரக்கட்டைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 12 கோடி இருக்கும் எனவும், இதுதொடா்பாக லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனா்.