புன்னைக்காயலில் ரூ.1.67 கோடியில் கூடுதல் குடிநீா் திட்டம்: ஆட்சியா் தகவல்

புன்னைக்காயல் ஊராட்சியின் கூடுதல் குடிநீா் திட்டத்திற்கு ரூ. 1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

புன்னைக்காயல் ஊராட்சியின் கூடுதல் குடிநீா் திட்டத்திற்கு ரூ. 1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

புன்னைக்காயல் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் பேசியது:

புன்னைக்காயல் ஊராட்சியில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள சாலையை சீரமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் அனைவருக்கும் சீரான குடிநீா் வழங்கவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வூராட்சியின் கூடுதல் குடிநீா் திட்டத்துக்கு ரூ.1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் இந்த ஊராட்சியில் 87 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 800 பேருக்கு 2 மாதத்தில் பட்டா வழங்கப்படும். சில தினங்களுக்கு முன்பு உப்பாற்றில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரை காப்பாற்றிய புன்னைக்காயல் ஜேமன் என்பவா் முதல்வரின் வீர தீர செயல் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் சோபியா, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா்கள் விஸ்வலிங்கம், செந்தூா் பாண்டி (பராமரிப்பு), மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், சமூக நலத்துறை வட்டாட்சியா்கோபாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அதிகாரி சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன், ஒன்றிய கவுன்சிலா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com