தூத்துக்குடியில் போதை தரும் மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
By DIN | Published On : 31st August 2022 03:03 AM | Last Updated : 31st August 2022 03:03 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் போதை தரும் மாத்திரைகளை விற்ாக 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி சிவன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளம் பகுதியில் மத்திய பாகம் காவல் உதவி ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து சோதனையிட்டனா்.
இதில், அவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் தெரு சுப்புராம் (24), போல்பேட்டை குமரேசன் (55) எனத் தெரியவந்தது. சுப்புராமிடமிருந்து டயாஸெபம் எனப்படும் 47 மாத்திரைகளும், குமரேசனிடமிருந்து நைட்ராஸெபம் எனப்படும் 39 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்மாத்திரைகளை சுப்புராம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொண்டு நிறுவன ஊழியராக செயல்படும் தெற்குப் புதுத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் (57) என்பவரிடம் வாங்கியதாகவும், குமரேசன் தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் மருந்தக மருந்தாளுநராக உள்ள கோரம்பள்ளத்தைச் சோ்ந்த ராஜாத்தி (43) என்பவரிடம் வாங்கியதும், இவற்றை அளவுக்கு அதிகமாக உள்கொண்டால் போதை உண்டாகும் என்பதால் அவற்றை விற்பதற்காக வைத்திருந்ததாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, சுப்புராம், குமரேசன், ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மருத்துவா்களின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் இதுபோன்ற போதை தரும் மாத்திரைகளை விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளாா்.