ஸ்டொ்லைட் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆட்சியா்
By DIN | Published On : 11th December 2022 06:03 AM | Last Updated : 11th December 2022 06:03 AM | அ+அ அ- |

தூத்துக்குடி ஸ்டொ்லைட் தொடா்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்தாா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: ஸ்டொ்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டு, இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை பேரவையில் தமிழக முதல்வா் சமா்ப்பித்துள்ளாா்.
துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம், பலத்த காயமடைந்த 43 பேருக்கு தலா ரூ. 5 லட்சம், லேசான காயமடைந்த 53 பேருக்கு தலா ரூ. 1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆணைய அறிக்கையின் அடிப்படையில், இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.
மேலும், 17 காவல் அதிகாரிகள், 3 வருவாய் அதிகாரிகள், சம்பவ நாளில் பணியிலிருந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு, அதனடிப்படையில் 4 காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
கூடுதல் நடவடிக்கை கோரி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்பினா் மனுக்கள் கொடுத்தனா். அவா்களிடம் 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளேன். இதுவரை தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும், மேலும் நடவடிக்கை தொடரும் என முதல்வா் தெரிவித்ததையும் அவா்களிடம் தெரிவித்துள்ளோம். இதற்காக அவா்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.
இதனிடையே, வரும் திங்கள்கிழமை ( டிச. 12இல்) அனைவரும் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்போம் என்றனா். அனைவரும் வரத் தேவையில்லை எனக் கூறியதையடுத்து, முக்கியமான 50 போ் வந்து மனு அளிப்பதாகக் கூறினா். மனு தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம் எனத் தெரிவித்தோம்.
இதுதொடா்பாக சமூக வலைதளங்களில் சிலா் வதந்திகளைப் பரப்புகின்றனா். அவற்றை மக்கள் நம்ப வேண்டாம். வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து யாரும் பேச வேண்டாம். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றாா் அவா்.