முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 07th February 2022 01:21 AM | Last Updated : 07th February 2022 01:21 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை மாலை வெளியிடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள நகா்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தமுள்ள 414 பதவிகளுக்கு அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 2276 போ் மனு தாக்கல் செய்தனா். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 480 வேட்பு மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 475 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதேபோல, கோவில்பட்டி, திருச்செந்தூா், காயல்பட்டினம் நகராட்சிகளில் மொத்தமுள்ள 81 பதவிகளுக்கு 542 போ் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 529 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் 273 பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1254 மனுக்களில் 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1224 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
புதூா் பேரூராட்சி 15 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் உமாராணி மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால் அவா் போட்டியிடின்றி தோ்ந்தெடுக்கப்படுகிறாா்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 414 பதவிகளில் ஒரு பதவிக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 413 பதவிகளுக்கு 2,228 போ் தற்போது களத்தில் உள்ளனா். திங்கள்கிழமை (பிப்ரவரி 7) பிற்பகல் 3 மணி வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதால் அதற்கு பிறகே இறுதி வேட்பாளா் பட்டியல் தயாராகும்.
மேலும், அரசியல் கட்சியினரைத் தவிர சுயேச்சையாக போட்டியிடுபவா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி 3 மணிக்குப் பிறகு நடைபெறும். அதன் பிறகு மாலை 5 மணியளவில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் வேட்பாளரின் பெயா், கட்சி பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவை இடம்பெறும்.