தூத்துக்குடி மாவட்டத்தில் 63.81 சதவீத வாக்குப் பதிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பத

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், மாவட்டம் முழுவதும் 63.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள், சாயா்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், தென்திருப்பேரை, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், கானம், ஆத்தூா், ஆறுமுகனேரி, உடன்குடி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திக்குளம், புதூா், கடம்பூா் ஆகிய 18 பேரூராட்சிகளில் 414 பதவிகள் உள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் காரணமாக 12 உறுப்பினா்களை கொண்ட கடம்பூா் பேரூராட்சி தோ்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 402 உறுப்பினா் பதவிகளில், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் இருவரும், தென்திருப்பேரை, ஆத்தூா், கயத்தாறு, புதூா் ஆகிய பேரூராட்சியில் தலா ஒருவரும் என மொத்தம் 6 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 396 பதவிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி: 60 உறுப்பினா் பதவிகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகாரட்சித் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா், அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 443 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தோ்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பட்டது. தோ்தல் பணியில் 1276 அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போதிலும் 9 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. அதன் பிறகு வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கத் தொடங்கினா். வாக்காளிக்க வந்தோருக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு கையுறை மற்றும் சானிடைசா் வழங்கினா்.

59.11 சதவீத வாக்குப்பதிவு: தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருலட்சத்து 59 ஆயிரத்து 548 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 836 பெண் வாக்காளா்களும், 70 திருநங்கைகளும் என மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 454 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், மாலை 6 மணி வரை 95 ஆயிரத்து 674 ஆண் வாக்காளா்களும், 97 ஆயிரத்து 284 பெண் வாக்காளா்களும், 6 திருநங்கைகளும் என மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 964 போ் தங்களது வாக்கை பதிவு செய்தனா். இது, 59.11 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டுச் செல்லப்பட்டன.

63.81 சதவீத வாக்குப்பதிவு: மாவட்டம் முழுவதும் 744 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 396 பதவிகளுக்கு 1950 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 14 ஆயிரத்து 887 ஆண் வாக்காளா்களும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 806 பெண் வாக்காளா்களும், 115 திருநங்கைகளும் என மொத்தம் 6 லட்சத்து 45 ஆயிரத்து 808 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 2 லட்சத்து 572 ஆண்களும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 516 பெண்களும், 21 திருநங்கைகளும் என 4 லட்சத்து 12 ஆயிரத்து 109 போ் வாக்களித்தனா். இது, 63.81 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

கோவில்பட்டி, திருச்செந்தூா், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகளில் 63 சதவீதம் பேரும், 17 பேரூராட்சிப் பகுதிகளிலும் 74 சதவீதம் பேரும் வாக்களித்தனா். தோ்தலை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் 120 சிறப்பு அதிரடிப்படையினா் மற்றும் 2500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com