துவரங்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த வேன்: 22 பேர் காயம்
By DIN | Published On : 13th June 2022 10:17 AM | Last Updated : 13th June 2022 10:17 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 25 பேர் வாடகை வேனில் வேளாங்கண்ணி பூண்டி மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர்.
வேனை மதுரை மேலவாசலைச் சேர்ந்த மணிக்குமார் (32) ஓட்டி வந்த நிலையில், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை செவந்தாம்பட்டி விளக்கு என்னும் பகுதியில் அருகே வேன் சென்று கொண்டிருக்கும் பொழுது, முன்பக்க டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது ஏறி அடுத்த சாலையைக் கடந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த அந்தோணிசாமி (65), செல்வராஜ் (61), எஸ்தர் ராணி (56), செல்வராஜ் (36), ராஜாமணி (36), ராகேல் (60), மாரியம்மாள் (62), விக்டோரியா (60), ஜான் (36), அருணாதேவி (34), கிறிஸ்டி மேரி (30), தவமணி (60), ஆரோக்கியராஜ் (62), மேரி தெரேசா (30), அரிவாள் ஜோசப் (10), பிரேசிலின் (7), ஜெபராஜ் (41), உமா மகேஸ்வரி (24), நேசமணி (32), சுவீட்லின் (16), அகஸ்டின் மேசியா (15) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனடியாக துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை முடிந்து 18 பேர் ஊர் திரும்பிய நிலையில் , நான்கு பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.