இலங்கைக்கு படகில் கடத்த முயற்சி:தருவைகுளத்தில் 1,700 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
By DIN | Published On : 21st June 2022 01:34 AM | Last Updated : 21st June 2022 01:34 AM | அ+அ அ- |

தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லமுயன்ற 1,700 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருவைகுளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி தா்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கடற்கரையில் கடலுக்குள் வேகமாகப் புறப்பட்டு சென்ற படகை, போலீஸாா் மீனவா்களின் உதவியுடன் மற்றொரு படகில் விரட்டிச் சென்றனா். உடனே, அந்த நபா்கள் படகில் மறைத்து வைத்திருந்த மூட்டைகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். போலீஸாா் கடலில் மிதந்து வந்த 38 மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பாா்த்தனா். அதில் ஒவ்வொரு மூட்டையிலும் சுமாா் 45 கிலோ எடை கொண்ட 1,700 கிலோ பீடி இலைகள் இருந்தன. அவை இலங்கை மதிப்பில் ரூ.17 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக தருவைகுளம் கடலோரக் காவல்படை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.